வவுனியா சுற்றுலா மையத்தின் கட்டிடங்களை உடைக்க நீதிமன்றம் இடைக்கால தடை!
வவுனியா குளப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலா தளத்தின் சட்டவிரோத கட்டிடங்களை உடைக்க நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா மையத்தின் கட்டிடங்களை உடைப்பதற்கு நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளதாக வவுனியா சுற்றுலா மையத்தின் உரி;மையாளர் இ.யுவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்.
கடந்த ஓரு வருடத்திற்கு முன்னால் வவுனியா நகரசபையிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வவுனியா குளத்தின் நீர்த் தொட்டியை பெற்றிருந்தேன்.
குத்தகையானது தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு எனக்கு வழுங்குவதாக நகரசபையினால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா சுற்றுலா மையத்தில் என்னால் செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தையும் ஐந்து வருடங்களின் முடிவில் வவுனியா நகரசபையிடம் அன்பளிப்பாக வழங்குவதாக எனது கையெழுத்துடன் எழுத்து மூலம் நகரசபைக்கு அறிவித்திருக்கின்றேன்.
இதன் அடிப்படையில் நகரசபையானது சுற்றுலா மையத்தை ஐந்த வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் எனக்கு வழங்கியுள்ளனர்.
இருந்தபோதும் 2020 இல் கமக்கார அமைப்பினரால் வவுனியா நகரசபைக்கு எதிராகவும், நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து சுற்றுலா மையத்தில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
எனினும் எனது பணிகளை நிறுத்துமாறு எந்த அறிவுறுத்தலையும் வவுனியா நகரசபை எனக்கு வழங்கியிருக்கவில்லை.
வவுனியா குளத்தை நிரப்பி மண் கொட்டியதாக தெரிவிக்கும் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொதடர்பும் இல்லை.
அத்துடன் சுற்றுலா மையத்தில் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்திற்கும் நகரசபையின் அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவத்தார்.
மேலும் இரண்டு கோடி ரூபாவிற்கு மேல் செலவு செய்து இந்த சுற்றுலா மையத்தை அபிவிருத்தி செய்துள்ளேன்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வரத்து இல்லாத நிலையில் சுற்றுலா மையம் வருமானம் இல்லாது பெரும் சரிவை சந்தித்தது.
நகரசபை நிர்வாகமானது என்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதாவது அனுமதி இல்லாமல் கட்டிடங்களை கட்டுகிறார் என தெரிவித்து என்மீது அவதூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான அவதூறு காரணமாக சுற்றுலா மையத்திற்கு வரும் மக்களின் தொகை கணிசமான அளவு குறைவடைந்;துள்ளது.
என்மீது சமூக வலைத்தளங்களின் ஊடாக அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
அத்துடன் சுற்றுலா மையத்தின் கட்டிடங்களை நகரசபை உடைக்க கூடாது எனவும் அது இயற்கை நீதி கோட்பாட்டிற்கு எதிரானது எனவும் தெரிவித்து வவுனியா மேல்நீதிமன்றத்தில், கடந்த 21ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு ஒன்றையும் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.