4 ஆவது முறையாகவும் சென்னை அணி மகுடம் சூடியது

0 264

ஐபிஎல் மாபெரும் இறுதிப் போட்டியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வீழ்த்தி 4 ஆவது முறையாகவும் ஐபிஎல் கிண்ணத்தை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுவீகரித்து மகுடம் சூடியுள்ளது.

2021 ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட சென்னை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சென்னை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டு பிளசிஸ் 59 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆட்டமிழக்காமல் அதிரடி ஆட்டத்தை வௌிப்படுத்திய மொய்ன் அலி 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ருதுராஜ் கெய்க்வாட் 32 ஓட்டங்களையும் ரொபின் உத்தப்பா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சுனில் நரேன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதும் பின் வரிசை வீரர்கள் பிரகாசிக்காததால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுப்மான் கில் 51 ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வௌியேறினர்.

ஒன்பதாவது விக்கெட்டுக்கு துடுப்பெடுத்தாடிய லோக்கி பெர்குசன் 18 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்ட நிலையில் ஷிவம் மாவி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 13 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

சென்னை அணி சார்பில் பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுக்களையும்,

ஹேசில்வுட் மற்றும் ஜடேஜா தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதற்கமைய, 2021 ஐபிஎல் கிண்ணத்தை சென்னை அணி நான்காவது முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.