கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்தியாவர் கைது.
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இந்தியாவில் பெங்களூரில் வைத்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டை சேர்ந்த 39 வயதுடைய மொஹமட் இம்ரான் கான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தொடக்கம் இவரைக் கைது செய்ய இந்திய பாதுகாப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இலங்கையிலிருந்து தமிழ்நாடு மற்றும் பெங்களூரு வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு ஆட்களை அழைத்து வந்துள்ளதை இந்திய பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 5 இந்திய நாட்டவர்கள் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர் இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.