மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு.

0 134

 கம்பஹா – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு.

இந்த சம்பவத்தில் 71 பேர் காயமடைந்துள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார்.

காயமடைந்தவர்களில் இரண்டு அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு காயமடைந்தோரில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களில் சுமார் 15 பேருக்கு சத்திர சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலருக்கு சத்திர சிகிச்சைகள் நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 71 பேரில், 48 பேருக்கு கொவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 26 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

எஞ்சிய கைதிகளுக்கு தொடர்ந்தும் கொவிட் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை இன்று அதிகாலை 6 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

 

எனினும், அதிகாலை 5 மணியளவிலும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.                                                                                                                                                     

Leave A Reply

Your email address will not be published.