யாழ்.பல்கலை மாணவனுக்கு கொரோனாத் தொற்று.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மருத்துவ பீட மாணவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்று மாலை இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
மாத்தளையைச் சேர்ந்த மாணவன், தனது வீட்டுக்குச் சென்றிருந்த போது உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்று யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.
மாணவன் சென்ற இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரத் துறையினர் நேற்றிரவு முதல் முன்னெடுத்தனர்.
அதனடிப்படையில் அவர் சென்றதாக தெரிவிக்கப்படும் உணவகம், குடிதண்ணீர் வழங்கல் நிலையம் என 7 வர்த்தக நிலையங்கள் இன்று காலை வரை மூடப்பட்டுள்ளன. அவற்றில் பணியாற்றுபவர்கள் உட்பட 50 பேர் வரை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மாணவனுடன் தொடர்புபட்ட நாளிலிருந்து 7ஆவது நாள் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.