வவுனியா இளைஞரின் வங்கிக் கணக்கில் – ஒரு லட்சம் கோடி – 6 பேர் கைது.
ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த வருடம் இலங்கை மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக கூறி தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.
அந்த அழைப்பில் உங்களது வங்கிக் கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிடப்பட்டுள்ளது.
அதனை வெளியில் எடுப்பதற்கு நீங்கள் உதவினால் குறித்த பணத்தில் 7500 கோடியை நாங்கள் எடுத்துக்கொண்டு மீதி 2500 கோடியை உங்களுக்கு தருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட இளைஞனும் குறித்த்த பண விவகாரம் தொடர்பில் கடந்த வருடம் 6 ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கி வந்துள்ளார்.
இளைஞனின் வங்கியில் வைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட இலங்கை மதிப்பின் படி ஒரு இலட்சம் கோடி இலங்கை ரூபாவை மீள பெறவே இவ்வாறு கொழும்பில் தங்கியுள்ளனர்.
எனினும் பணத்தினை வங்கியில் இருந்து மீளப்பெறும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் இளைஞன் மீண்டும் வவுனியாவிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்றையதினம் குறித்த இளைஞரை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இளைஞனை அழைத்து செல்வதற்காக சொகுசு வாகனம் ஒன்றில் வவுனியாவுக்கு வந்துள்ளனர்.
எனினும் குறித்த இளைஞன் அவர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இளைஞனின் நண்பன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலுக்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் ஆறு பேர் கொண்ட அந்த குழுவினரை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் கொழும்பில் இருந்து மூன்று சொகுசு வாகனங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.