இறுதிப் போட்டியில் டெல்லி… நூலிழையில் ஆட்டத்தை கோட்டை விட்ட ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரின் பரபரப்பான குவாலிபயர் 2 ஆட்டத்தில், டெல்லி அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், குவாலிபையர்-2 போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. டெல்லி அணிக்கு துவக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் டெல்லி அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
டெல்லி அணி 8.2 ஓவரில் 86 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட் இழந்தது. ஸ்டாய்னிஸ் 27 பந்தில் 38 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். தவான் 26 பந்தில் அரைசதம் அடித்தார்.
அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 21 ஓட்டங்களிலும், அதன்பின் வந்த ஹெட்மையர் அதிரடி ஆட்டத்த வெளிப்படுத்த, டெல்லி 200 ஓட்டங்களை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 19-வது ஓவரில் தவான் 50 பந்தில் 78 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். கடைசி ஓவரில் நடராஜன் 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தது.
ஹெட்மையர் 22 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆர்மபமே அதிர்ச்சி காத்திருந்தது.
துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் 2 ஓட்டங்களிலும், பிரியம் கார்க் 17 ஓட்டங்களிலும், அடுத்து வந்த மணீஷ் பாண்டே 21, ஹோல்டர் 11 ஓட்டம் என வந்த வேகத்தில் பெளவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால், தனி ஒருவனாக வில்லியம்சன் ஹைதராபாத் அணியின் வெற்றிக்காக போராடினார். அவரும், 45 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 67 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, ஹைதராபாத் அணியின் தோல்வி உறுதியானது.
இறுதியாக ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் அணி டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டு, ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதும் இறுதிப்போட்டி வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது நினைவுகூரத்தக்கது.