தெஹிவளையில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் – விசாரணையில் வெளியான தகவல்
தெஹிவளை, கவுடானை பகுதியில்அத்திடிய கால்வாய் ஊடாக செல்லும் நீரில் பெயின்ட் கலந்த நீரை விடுவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்வாயில் இரசாயனம் கலந்துள்ளதால் கால்வாய் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸ் சுற்றாடல் பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளனர்.
கால்வாயில் ஏற்பட்ட மாற்றம்
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து சிவப்பு நிற பெயின்ட் பீப்பாயை அகற்றுமாறு சில தரப்பினர் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, குறித்த பீப்பாய்களை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அவை பொங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த பெயின்டுகளை கால்வாயில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கால்வாயில் சுமார் மூன்று நாட்களாக தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது.
பிரதேசவாசிகள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், நீதவான் அவரை கடுமையாக எச்சரித்துள்ளார்.