அதிகரிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களின் கைது! ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒருமுறை கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், 66 இந்திய கடற்றொழில் படகுகளையும் 497 இந்தியர்களையும் இலங்கை நாட்டின் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை இந்தியா-இலங்கை உறவுகளில் ஒரு கரும்புள்ளியாக உள்ளது. இந்தநிலையில், இலங்கை கடற்படையினரின் இந்த கைதுகள், தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களுக்கு பெரும் துயரத்தையும் ஏற்படுத்துகின்றன என்று தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இந்திய கடற்படையினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான 7ஆவது ஆண்டு உயர்மட்ட கூட்டம் 2024 நவம்பர் 11 அன்று இலங்கையின் கொழும்பில் நடத்தப்பட்டது.
இதன்போது, சட்டவிரோத கடற்றொழில் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.