வடக்கு மாகாணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வாக்குப் பதிவுகள்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருகின்றது.இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை மக்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.