பணியிடை செய்யப்பட்ட பொலிசார் குற்றமற்றவர் என அறிவித்துள்ள கனடா பொலிஸ் துறை
கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கோவிலுக்குச் சென்றிருந்த இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
அப்போது, காலிஸ்தான் ஆதரவாளர்களுடன், பணியில் இல்லாத பொலிசார் ஒருவரும் அந்த கலவரத்தில் பங்கேற்றது தெரியவந்ததால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், ஹரிந்தர் சோஹி (Harinder Sohi) என்னும் அந்த பொலிசார் குற்றமற்றவர் என பொலிஸ் துறை தற்போது தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க ஹரிந்தர் முயன்றதாகவும் அதனால் அவர்களுடன் கைகலப்பு உருவானதாகவும் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹரிந்தர் தனது கடமைகளை சட்டப்படியே நிறைவேற்றியதாகவும் பொலிசார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஹரிந்தர் மீது குற்றம் சாட்டி அவரை பணியிடை நீக்கம் செய்யக்கோரியவர்கள், ஆதாரமில்லாமல் அதைச் செய்யவில்லை.
அது தொடர்பாக வெளியான வீடியோவில், ஹரிந்தர், சீருடை அணியாமல், கையில் காலிஸ்தான் கொடியுடன், இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பும் கூட்டத்தினருடன் நிற்கும் காட்சிகள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.