தமது உறவுகள் தொடர்பாக, தற்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை – காணாமல் போனோரின் உறவுகள் கவலை

0 600

வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 11 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இது வரை இலங்கை அரசாங்கம் காணாமல் போன நபர்கள் குறித்தும் தகவல் எதுவும் வெளியிடாமல் உள்ளமை அவர்களுக்கான உரிய நீதி கிடைக்காமையை உறுதிப்படுத்துவதாக மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வியாழக்கிழமை (10) மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டு பிடித்து தரக் கோரி அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த கவனயீர்ப்பு ஊர்வலமானது மன்னார் மாவட்ட பாதீக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

கடந்த 1983 – 2009 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட கடும் போரின் நிமித்தம் வடகிழக்கில் அதிகமான நபர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடுகளில் ஏற்படும் யுத்தம் காரணமாகவும், வன்முறைச் செயற்பாடுகள் காரணமாகவும் பலவந்தமாகக் காணாமல் போகச் செய்வதிலிருந்து எல்லா நபர்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனமானது 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இருப்பினும் எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அதிகமான நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை போர்க்காலங்களில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது.

மேலும், போர் முடிவுக்கு வந்த பின், கடந்த காலங்களில் இருந்த இலங்கை அரசாங்கமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு இணங்கியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுடைய குடும்பங்களுக்கான சரியான தீர்வினை இதுவரை வழங்கவில்லை.

நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம், காணாமல் போன உறவுகளுடைய குடும்பங்களுக்கு சரியான நீதியினைப் பெற்றுத்தரக் கூடியவைகளாக இதுவரை இல்லை.

2016ம் ஆண்டின் 14ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வெறுமனே பெயரளவிலான ஓர் அலுவலகமாக மாத்திரமே காணப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த காணாமல் போன நபர் ஒருவரின் பெயரில் காணப்பட்ட சொத்துக்களை சம்மந்தப்பட்ட அவர்களுடைய உறவினர்கள் பெற்றுக்கொள்வதற்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமான காணப்படாமைக்கான சான்றிதழினைப்பயன்படுத்தி அவற்றைப் பெறமுடியும் எனக்கூறப்பட்டிருந்தும் இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை என்பது எமது களப்பணியின் போது தெளிவாகியது.

2010ம் ஆண்டின் 19ஆம் இலக்க இறப்புக்களினதும் காணாமல் போன ஆட்களினதும் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 8து(2)ம் பிரிவின் கீழ் வழங்கப்படும் இக் காணப்படாமைக்கான சான்றிதழினை சகல அரச திணைக்களங்களையும் அரச நிறுவனங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி காணப்படாமைக்கான சான்றிதழின் பின் பகுதியின் அடிப்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தும், அது முற்று முழுதாக நடைமுறையில் இல்லை .

மேலும் காணாமல் போனோர் தொடர்பாக வழங்கப்படவிருந்த இடைக்கால உதவித்தொகையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் மன்னார் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் அது வழங்கப்படவில்லை. கடந்த இலங்கை அரசாங்கமானது காணாமல் போனோர் தொடர்பாக வழங்கப்படவிருந்த இடைக்கால உதவித்தொகைக்கென பாராளுமன்றத்தில் ஒரு குறித்த தொகை ஒதுக்கீட்டினை பாதீட்டில் முன்வைத்திருந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கமானது இம்முறை பாராளுமன்றத்தில் முன்வைத்த பாதீட்டில் காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால உதவித்தொகை குறித்தோ நல்லிணக்க பொறிமுறைகள் குறித்தோ எவற்றையும் உள்ளடக்கவில்லை.

ஆகவே, எமது உறவுகள் தொடர்பாக, தற்போதைய இலங்கை அரசாங்கமானது கவனஞ் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.

11 ஆண்டுகளாக பல போராட்டங்களை வடக்கு கிழக்கு மக்கள் செய்துவரும் நிலையில் இதுவரை இலங்கை அரசாங்கமானது காணாமல் போன நபர்கள் குறித்தும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது குறித்தும் அல்லது அவர்கள் இருக்கின்றார்களா? அல்லது இல்லையா?

என்பது குறித்தும் தகவல் எதுவும் வெளியிடாமல் உள்ளதும் அவர்களுக்கான உரிய நீதி கிடைக்காமையை உறுதிப்படுத்துகின்றது.

நிலைமாறுகால நீதி தொடர்பான சட்டங்களை அமுல்படுத்தியும் அதன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனக்கட்டமைப்புக்களாலும் எவ்விதப் பலனும் ஏற்படாமை குறித்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுடைய குடும்பங்கள் அதற்கெதிராக கண்டனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதி வேண்டி மனித உரிமைகள் தினமாகிய இன்றும் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றவேளை

இதுவரை எந்தவொரு உள் நாட்டு பொறி முறைககளும் எமக்கு திருப்தியளிக்கவில்லை என்பதை சர்வதேசத்திற்கு வலியுருத்தும் வகையிலே இப்போராட்டம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.என அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.