மன்னாரில் சுமார் 200 பேரிடம் பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு.
மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை(6) மதியம் 1.30 மணியளவில் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் மக்களிடம் எழுந்தமானமாக பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பேரூந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள் ,உணவகம், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்கள், முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், பயணிகள் என பல தரப்பட்டவர்களிடம் எழுந்தமானமாக பீ.சி.ஆர்.பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகரன், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி றோய் பீரிஸ், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொண்டனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.பிரதீப் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
மக்கள் குறித்த பீ.சி.ஆர்.பரிசோதனைக்பு பூரண ஒத்துழைப்பு வழங்கிய நிலையில் சுமார் 200 இற்கும் மேற்பட்டோரிடம் பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.