பொத்துவில் பேரணிக்கு யாழ் நீதிமன்றம் தடை..
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ் பல்கலை மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன
ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.
இந்தப் போராட்டம் இன்று காலை பொத்துவிலில் ஆரம்பமாகி பொலிஸாரின் தடையை மீறி நடைபெற்றுவருகிறது.
வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.