மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை!
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக 3 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கபட்டுள்ளன.
டேடா தமிழ் மாற்றுத்திறாளிகள் சம்மேளனத்தின்; ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கம், பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபா நிதியுதவி, பாதிக்கப்பட்டோர் அமைப்புகள் இயங்குவதற்கான நிதியுதவி ஆகிய கோரிக்கைகளே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றினையும் தமிழ் மாற்றுத்திறாளிகள் சம்மேளம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில், பாதிக்கப்பட்டோர் சார்பாக மலரும் புத்தாண்டில் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இந்த ஆண்டில் நிறைவேற்றித் தருமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
அத்தோடு போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்தான கொள்கை உருவாக்கத்தையும் கோருகின்றோம்.
போர் ஓய்ந்து 12 வருடங்களை கடக்கின்றோம்.
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றைய மாகாணங்களிலும் பார்க்க அதிகம்.
பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் அவர்களின் வலியை ஆற்றுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் இலங்கை அரசும், மாகாண அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், உறவுகளும் ஆற்றிவரும் சேவைகளை நாம் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.
இருந்த போதும் எமது தேவைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது என்பதை நாம் எமது உறவுகளின் முன் சொல்ல வேண்டியுள்ளதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம்.
மாற்றுத்திறனாளிகள் தங்குவதற்கான வசதிகளுடன் கூடிய காப்பகங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால தேவையாக உள்ளது.
இன்னொருவரில் முழுமையாக தங்கி வாழ்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் தமக்கான ஒரு காப்பகங்கள் இல்லை என்று ஏங்குகின்றார்கள்.
அவ்வாறான காப்பகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என கோருகின்றோம்.
இன்னொருவரில் பெரிதும் தங்கி வாழ்பவர்களுக்கு குறைந்த பட்சம் ரூபா 10,000 மாதாந்த உதவித் தொகையாக கொடுக்கப்பட வேண்டுமென கோருகின்றோம்.
உதாரணமாக,
1. முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்
2. இரண்டு கரங்களையும் இழந்தவர்கள்
3. பல அங்கங்களை இழந்தவர்கள்
4. இரண்டு கண்களையும் இழந்தவர்கள்
5. இரண்டு கால்களையும் முற்றாக இழந்தவர்கள்.
6. முதுமையில் அநாதைகள் ஆக்கப்பட்டவர்கள்.
கிராமங்களை மையப்படுத்தி இயங்கி வரும் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளுக்கு, அவை தொடர்ச்சியாக இயங்குவதற்கு பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோவதாக அந்த அறிக்கையளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தாம் விழிப்புணர்வு செயற்பாடு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் இதன்போது தெரிவித்தனர்
பாதிக்கப்பட்டோர் டேடா தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடக சந்திப்பில் அமைப்பின் இயக்குனர் திரு. க.ஜீவராசா, மட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் சம்மேளன தலைவர் திரு து.அரிதாஸ் அத்துடன் சம்மேளனத்தின் ஆலோசகர் திரு. சோ. புவிராசசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.