முடிவுக்கு வந்தது வெளிநாட்டுப் பயணத் தடை!
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தங்கள் நாட்டவா்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அவுஸ்திரேலியா அடுத்த மாதம் நீக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:
கடந்த 18 மாதங்களாக பெரும்பாலான குடிமக்களும், நிரந்தர குடியேற்ற உரிமை பெற்றவா்களும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 16 வயதுக்கு மேற்பட்டவா்களில் 80 சதவீதத்தினா் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்படும் என்றாா் அவா்.
இந்த இலக்கு அடுத்த மாதம் எட்டப்படும் என்பதால், வெளிநாட்டுப் பயணத் தடை நவம்பரில் ரத்து செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எனினும், வெளிநாட்டுப் பயணிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கான திகதி எதையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.