கோவிட் – 19 பரவலைத் தடுக்க காற்றோட்ட வசதி இருக்க வேண்டும்?

0 322

குளிர் காலம் நெருங்குகிறது என்பதால் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அதிக நேரத்தை மக்கள் செலவழிக்க கூடும்.

இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாமல் இருக்க மிகவும் முக்கியமான தேவை நீங்கள் இருக்கும் கட்டடத்தின் உள்ளே நல்ல காற்றோட்ட வசதி இருக்க வேண்டும் என்பதே.

அடிக்கடி கைகளைக் கழுவுவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க உதவும் என்று அறிவியலாளர்கள் பல மாதங்களாக சொல்லி வருகிறார்கள்.

ஆனால் நாம் எந்த கட்டடத்தின் உள்ளே இருக்கிறோமோ அதற்குள் இருக்கும் காற்று குறித்தும் கவலை கொள்ள வேண்டும் என்று தற்பொழுது ஆய்வாளர்களும் பொறியியலாளர்களும் கூறுகிறார்கள்.

சிறந்த காற்றோட்ட வசதி இல்லாத ஒரு கட்டடத்தின் உள்ளே வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்பைத் தடுக்கும் ஐந்து வழிகளை தொகுத்து வழங்குகிறோம்.

1. உள்ளே நுழையும்போதே உறுதிப்படுத்துங்கள்

நீங்கள் ஒரு கட்டத்தினுள் நுழையும்போது அங்கே துர்நாற்றம் வீசுகிறது என்றால் காற்றோட்ட வசதியில் ஏதோ தவறு உள்ளது என்று பொருள்.

ஒரு கட்டடத்தின் உள்ளே போதுமான அளவு புதிய காற்று வரவில்லை என்றால் அதற்குள் இருப்பவர்களுக்கு வைரஸ் தொற்று உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஏனென்றால் காற்று மூலம் பரவக்கூடிய நுண்கிருமிகள் கட்டடத்திற்கு வெளியே செல்லாமல் உள்ளேயே உலாவிக் கொண்டிருக்கும்.

கொரோனா காலத்திற்கு முன்பே வகுக்கப்பட்ட விதிகளின்படி பணியிடங்களில் இருப்பவர்கள் ஒரு நொடிக்கு 10 லிட்டர் அளவிலான தூய காற்றைப் பெற வேண்டும்.

கொரோனா பரவலுக்கு பின்பு அதன் முக்கியத்துவம் தற்பொழுது மேலும் அதிகரித்துள்ளது.

சாட்டர்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பில்டிங் சர்வீசஸ் இன்ஜினியர்ஸ் என்னும் அமைப்பின் தொழில்நுட்ப இயக்குனர் முனைவர் ஹைவெல் டேவிஸ், “ஒரு கட்டடத்திற்குள் ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளானவர்கள் இருந்தால், அதற்குள் புதிதாக காற்று வந்து செல்லும் பொழுது அந்த காற்றில் கலந்திருக்கும் நோய் பரப்பும் நுண்கிருமிகளின் அளவு குறைகிறது. இதன் மூலம் பிறருக்கு தொற்று ஏற்படுவதை நீங்கள் குறைக்கிறீர்கள்,” என்கிறார்.

2. எந்த வகை ஏ.சி என்பதில் கவனம் தேவை

Split air conditioner

குளிரூட்டல் வசதி செய்யப்பட்ட அறைகள் என்றால் எந்த வகையிலான ஏ.சி. கருவி பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

மிகவும் எளிமையானவை மற்றும் பரவலானவை, நீங்கள் பெரும்பாலும் பார்க்கக்கூடிய, சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் வெள்ளை நிற ஏ.சி-க்கள்தான். இவை ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் எனப்படுகின்றன.

இந்த வகையில் அந்த கட்டடத்திற்குள் இருக்கும் காற்றை உறிஞ்சிக் கொண்டு அதையே குளிரூட்டி வெளியிடுகின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அந்த கட்டடத்தின் உள்ளே இருக்கும் காற்றை இவை மறுசுழற்சி செய்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஏ.சி-க்கள் இருக்கும் அறைகள் அல்லது கட்டங்களுக்குள் உடனே சென்று விட்டு வெளியே வருவது பெரிய அளவில் பிரச்சனையை உண்டாக்காது.                                                        இந்த வகை ஏ.சி-க்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது சீன உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அறிகுறிகள் தென்படும் முன்பே அங்கு வந்து உணவு உட்கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் மூலம் பரவிய கிருமித் தொற்றுகள், அங்கிருந்த காற்றிலேயே உலாவிக் கொண்டிருந்துதான் இருக்கும் அங்கு வந்தபோது பிறருக்கும் கோவிட்-19 பரவக் காரணம் என்று தெரியவந்தது.

3.புதிய காற்று உள்ளே வரும் விகிதம் எவ்வளவு?

தற்போது கட்டப்படும் நவீன கட்டடங்களில் ஜன்னல்கள் திறக்கக்கூடிய வசதியை கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்டு இருக்கின்றன. அப்படியானால் அங்கு காற்றோட்ட வசதிக்கு எவ்வாறு உதவி செய்வது?

A rooftop air conditioning unit

இந்த வகை கட்டடங்களில் பெரும்பாலும் குழாய் மூலம் உள்ளிருக்கும் காற்றை வெளியே உறிஞ்சி வெளியே இருக்கும் காற்றை உள்ளே கொண்டு வரும் காற்றோட்ட அமைப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கட்டடங்களில் புதிய காற்று உள்ளே வரும் விகிதம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தோற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவு.

“100% வெளிப்புற காற்றை நீங்கள் கொண்டு வருகிறீர்கள் என்றால் 100% உங்களுக்கு நல்லது என்று பொருள்,” என்கிறார் லீட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் கேத் நோக்ஸ்.

குழாய்களால் வெளியே இருந்து உள்ளே உறிஞ்சப்படும் காற்றின் விகிதம் எவ்வளவு என்பதை அந்த கட்டடத்தின் தொழில்நுட்பத்தை நிர்வகிப்பவர்கள் அல்லது உரிமையாளர்களால் பெரும்பாலும் முடிவு செய்யப்படுகிறது.

இத்தகைய தொழில் நுட்பத்திற்கு அதிக மின்னாற்றல் அல்லது எரிபொருள் தேவைப்படும்.

ஏனென்றால் குளிர் காலங்களில் உள்ளே உறிஞ்சப்படும் காற்று சூடாக்கப்படவேண்டும். கோடை காலங்களில் உள்ளே இழுக்கப்படும் காற்று குளிரூட்டப்பட வேண்டும்.

4. ஏர் ப்யூரிஃபயர் உங்களை முழுவதும் காப்பாற்றாது

Office worker wearing mask

கொரோனா வைரஸ் பரவல் கட்டடங்களுக்கு உள்ளே நிகழக் கூடாது என்பதற்காக தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் (air purifier) வைக்கப்பட்டுள்ளன.                                                                                                                                                  அந்த இயந்திரங்களின் வடிகட்டிகளில் (filters) வைரஸ் தொற்று இருப்பதா என்பதை கண்டறிய வேண்டும்.

அமெரிக்காவில் ஓரிகான் ஹெல்த் அண்ட் சயின்ஸ் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் உள்ள ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில், “பெரும்பாலும் வைரஸ் கிருமிகள் இத்தகைய ஃபில்டர்கள் மூலம் தடுக்கப்படும் அவற்றையும் மீறி ஃபில்டர்களிலிருந்து தப்பும் கிருமிகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது,” எனக் கண்டறியப்பட்டது.

எனவே மனிதர்களுக்கு சுவாப் டெஸ்ட் செய்வதைப் போலவே இந்த ஃபில்டர்களிலும் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்தால் அந்த கட்டிடத்தில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட யாரேனும் பணியாற்றுகிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் கெவின் வான் டென் வைமலென்பர்க்.

தென் கொரியாவில் இருந்த ஓர் அலுவலக கட்டடத்தில் 11ஆவது மாடியில் ஒரு கால் செண்டர் இயங்கிவந்தது.

அங்கு ஒருவருக்கு உண்டாகி இருந்த கொரோனா தொற்று 90 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பரவியது.

அந்த அலுவலகத்தில் உள்ள காற்று சுத்திகரிப்பான்களின் வடிகட்டிகள் முறையாக பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் கோவிட்-19 தொற்றுப் முன்கூட்டியே தடுத்து இருந்திருக்கலாம்.

5. காற்று வீசும் திசையில் வரிசையாக அமர்ந்தால் ஆபத்து

அடைக்கப்பட்ட கட்டங்களுக்குள் காற்றோட்ட வசதி மிகவும் முக்கியமானது என வல்லுநர்கள் அனைவரும் கூறுவார்கள். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் கட்டடத்தை வடிவமைப்பது என்பது அவ்வளவு ஒன்றும் சுலபமானதல்ல.

எனவே காற்று வீசும் திசையிலேயே அனைவரும் வரிசையாக அமர்வதை தடுக்க வேண்டும்.

Office worker looking through window

நிக் விர்த் இதற்கு முன்பு ஃபார்முலா- 1 ரக ரேசிங் கார்களை வடிவமைத்து வந்தவர்.

தற்பொழுது தனியார் நிறுவனங்கள் காற்றோட்ட வசதியை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறித்து தொழில்முறை ஆலோசனை வழங்கி வருகிறார்.

காற்று கட்டடத்தின் உள்ளே வரும் ஜன்னலருகே இருக்கும் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருந்தால் அவரை கடந்து வரும் காற்று மூலம் அதே அறையில் இருக்கும் பிறருக்கும் தொற்று உண்டாக வாய்ப்புள்ளது என்று அவர் வருத்தப்படுகிறார்.

ஜன்னல் அல்லது அறையினுள் காற்று உள்ளே நுழையும் இடத்துக்கு நேராக காற்று வீசும் அதே வழியில் மக்கள் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

புதிய காற்று உள்ளே வருவது நல்லதுதான். ஆனால் நேர் கோட்டில் அந்த காற்று உள்ளே வந்து அதில் வைரஸ் கலந்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், பேராசியர் நோக்ஸ் இக்கருத்தில் இருந்து மாறுபடுகிறார்.

அதிக அளவில் புதிய காற்று அறையின் உள்ளே நுழைவதால் அதன் மூலம் உண்டாகும் அபாயங்களை விட நன்மைகளே அதிகம் என்று கூறுகிறார் பேராசிரியர் கேத் நோக்ஸ்.

திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உள்ளே நுழையும் காற்றின் மூலம் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமி சென்று சேர வாய்ப்புள்ளது. ஆனால் அது தொற்றை உண்டாக்கும் அளவைவிட மிகவும் குறைவான அளவே இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

இதுபோல வல்லுநர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஒன்றும் வியப்பல்ல.

ஆனால் இந்த வைரஸ் குறித்து இன்னும் முழுமையாக நமக்குத் தெரியவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

அதற்கான ஒரு வழி நாம் இருக்கும் கட்டடத்திற்குள் போதுமான அளவு காற்றோட்ட வசதிக்கு உறுதி செய்வதுதான்.

Leave A Reply

Your email address will not be published.