சீர்திருத்தங்களிற்காக பெரும்பான்மையை கோரும் ஜனாதிபதி : இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் !
இடதுசாரி கொள்கைகளில் ஆர்வமுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக்கவிற்கு மிக முக்கியமானது என கருதப்படும் நாடாளுமன்ற தேர்தல் இலங்கையில் இன்று வியாழக்கிழமை (14) இடம்பெறுகின்றது.
பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தி அலையின் மத்தியில் ஊழல் எதிர்ப்பு கொள்கையை மையப்படுத்திய அனுரகுமார திசநாயக்க செப்டம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றினார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கையின் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு மூன்று ஆசனங்கள் மாத்திரமே காணப்பட்டது.
இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கான – ஊழல்களிற்கு முடிவு கட்டுவதற்கான அமைப்பு முறை மாற்றத்தை அனுரகுமார திசநாயக்க ஏற்படுத்துவதற்கு இதுதடையாக காணப்பட்டது.
இதன் காரணமாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக, தான் ஜனாதிபதியான பின்னர் அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்றத்தை கலைத்தார். முன்கூட்டியே தேர்தலிற்கு அழைப்பு விடுத்தார்.
ஏழு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவிற்கு கிடைத்த வலுவான ஆதரவு இந்த தேர்தலிலும் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் 42 வீத வாக்குகள் கிடைத்தன. கடந்த காலங்களில் எந்த தேர்தலிலும் 3 வீத வாக்குகளை மாத்திரம் பெற்ற கட்சிக்கு இது பெரும்பாய்ச்சல் என தெரிவிக்கின்றார் கொழும்பை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் குசல்பெரேரா.
அந்த வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலிலும் கிடைக்கும், ஆனால் இம்முறை சிறிது குறைவாக கிடைக்கும் என்கின்றார் அவர்.
ஏகேடி என அழைக்கப்படும் தற்போதைய ஜனாதிபதிக்கு வயது 55. தான் வாக்குறுதியளித்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவதற்காக நாடாளுமன்ற பெரும்பான்மையை கோருகின்றார்.
தற்போது இலங்கையின் வரலாற்றிலேயே மிகச்சிறிய அமைச்சரவையின் தலைவர் அவர். பிரதமர் ஹரிணி அமரசூரியவும் இரண்டு அமைச்சர்களும் மாத்திரம் உள்ளனர் . இலங்கையின் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களையே அமைச்சர்களாக நியமிக்க முடியும்.
நாட்டை பல தசாப்தங்களாக ஆண்ட தவறான குற்றம் சாட்டப்படும் பாரம்பரிய கட்சிகளை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள் என்பதிலேயே நாடாளுமன்ற ஆசனங்களில் அதிகளவானவற்றை கைப்பற்றும் அனுரகுமார திசநாயக்கவின் நம்பிக்கை தங்கியுள்ளது.
இரண்டு வருடங்களிற்கு முன்னைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு இன்னமும் மீளவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற கடன் உதவி மூலம் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தினார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புகழப்படுகின்ற போதிலும், அவர் அறிமுகப்படுத்திய சிக்கன நடவடிக்கைகள் குறிப்பாக மானியங்களை நிறுத்துதல், உணவு, எரிபொருள் விலைகள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன. இதனால் மில்லியன் கணக்கான இலங்கை மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
கடன்களை பெறுவதற்காக தங்கள் மீது திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை தளர்த்துவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வேன் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்தார்.
தேர்தலிற்கு முன்பாக ஜனாதிபதி நம்பிக்கையுள்ளவராக காணப்பட்டார்.’கடந்த காலங்களில் மக்களிற்கு எங்கள் மீது நம்பிக்கiயிருக்கவில்லை. ஆனால் செப்டம்பரில் மக்கள் எங்களிற்கு வெற்றியை அளித்தனர். நாங்கள் வெற்றிபெறக்கூடிய கட்சி என்பதையும் எங்களால் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதையும் நிரூபித்தனர் என தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார். நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்களை ஐக்கியப்படுத்தி வலுவான மக்கள் இயக்கத்தை ஏற்படுத்துவதே அடுத்த இலக்கு என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலும் அரசியல் பரப்பில் மாற்றத்திற்கான மக்களின் எதிர்பார்ப்பு குறித்த சர்வஜன வாக்கெடுப்பாக கருதப்படுகின்றது. எனினும் மக்கள் மத்தியில் குறைந்தளவு உற்சாகமே காணப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறப்போகின்றது என மக்கள் கருதுவதால் எவரும் அதிகளவு ஆர்வத்துடன் இல்லை என தெரிவிக்கின்றார் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமீர தெடுவகே.