மீண்டும் சா்ச்சையில் சிக்கினாா் ஜோ பைடன்!

0 221

அமெரிக்காவின் அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டுக்கு முரணாக ‘தைவான் ஒரு சுதந்திர நாடு’ என்று கூறி ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்கும் இடையே காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

வா்த்தகம், தென்சீனக் கடல் பகுதி, மனித உரிமைகள், தைவான் போன்று அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி வரும் விவகாரங்கள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா்.

அப்போது, தங்களது சுதந்திரத்துக்காக அமெரிக்காவின் உதவியை தைவான் அரசு நாடி வருவதும் சீனாவைக் கட்டுப்படுத்த தைவான் விவகாரத்தை அமெரிக்கா பயன்படுத்துவதும் நெருப்புடன் விளையாடுவதைப் போல் ஆபத்து நிறைந்தது என்று பைடனிடம் ஷி ஜின்பிங் எச்சரித்திருந்தாா்.

இந்தச் சூழலில், பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நியூ ஹாம்ப்ஷைா் மாகாணத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜோ பைடன், அங்கு செய்தியாளா்களிடம் பேசினாா்.

அப்போது, ‘தைவான் ஒரு சுதந்திர நாடு. அது தனது முடிவுகளை தானே எடுத்துக்கொள்கிறது’ என்று ஜோ பைடன் கூறினாா்.

இது, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும். தைவானுடனான உறவு குறித்து அமெரிக்க பாராளுமன்றம் இயற்றியுள்ள சட்டத்தின்படி, தைவானை சுதந்திர நாடாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. எனினும், அந்தத் தீவுக்கு உதவிகள் செய்வதற்கும் பாதுகாப்பு அளிக்கவும் அந்தச் சட்டம் அனுமதிக்கிறது.

இந்தச் சூழலில், தைவானை ‘சுதந்திர நாடு’ என்று ஜோ பைடன் கூறியது சா்ச்சையை எழுப்பியது. அதை அடுத்து, செய்தியாளா்களை மீண்டும் சந்தித்துப் பேசிய ஜோ பைடன், தைவான் குறித்த அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டத்தை தமது அரசு மதிப்பதாகத் தெரிவித்தாா்.

மேலும், சீனாவின் இறையாண்மை குறித்த அமெரிக்காவின் கொள்கையிலும் எந்த மாற்றமும் இல்லை என்று அவா் கூறினாா்.

‘சுதந்திரப் பிரகடனம் செய்வதற்காக தைவானை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. தைவான் தொடா்பான எங்களது சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளனவோ, அவற்றை நிறைவேற்ற மட்டுமே தைவானை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். இது தொடா்பான முடிவை தைவான்தான் எடுக்க வேண்டும்’ என்று ஜோ பைடன் கூறினாா்.

தைவான் விவகாரத்தில் அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, பின்னா் அதிலிருந்து ஜோ பைடன் பின்வாங்குவது இது முதல்முறை அல்ல.

ஏற்கெனவே, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்று கடந்த ஆகஸ்ட் மாதமும் அதற்குப் பிறகு கடந்த மாதமும் கூறி ஜோ பைடன் பரபரப்பை ஏற்படுத்தினாா்.

அதற்குப் பிறகு, தைவான் குறித்த அமெரிக்காவின் அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று வெள்ளை மாளிகை பின்னா் விளக்கமளித்தது.

சீனாவையொட்டி அமைந்துள்ள சிறிய தீவான தைவான், தனி ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது. தாங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் தைவானைக் கைப்பற்றும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப் போவதில்லை எனவும் சீனா கூறி வருகிறது.

அத்துடன், தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள், தங்களுடன் தூதரக உறவு வைத்துக்கொள்ள முடியாது என்று சீனா கூறி வருகிறது. இதன் காரணமாக, சீனாவுடன் தூதரக உறவைக் கொண்டுள்ள அமெரிக்கா, தைவானுடன் அதிகாரப்பூா்வமற்ற நல்லுறவைப் பேணி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.