போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் வாங்கினேன் – ஆனால் பிரபாகரன் அவர்களை தண்டித்தார். ஒப்புக்கொண்ட டக்ளஸ்.
தமிழ்ஓரி செய்திகள்
போதைப்பொருள் வியாபாரிகளிடம் தாம் பணம் பெற்றுக்கொண்டதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூடடத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்…
போராட்ட இயக்கங்கள் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டிருந்தன.
நான் அதை நேரடியாகப் பார்த்திருக்கின்றேன், அவ்வாறு போதைப்பொருள் வியாபாரம் செய்தவர்களிடம் நான் பணம் வாங்கியிருக்கின்றேன்.
எமது இனத்தை அழிப்பதற்காகத்தான் இங்கு போதைப்பொருள் பரவவிடப்பட்டது என்று சொல்லி நாங்கள் தப்பிக்க முடியாது.
அனைத்து போராட்ட இயக்கங்களும் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டிருந்தன.
சில இயக்கங்கள் கப்பல் கப்பலாக போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டன.
சில இயக்க உறுப்பினர்கள் தனியாகவும் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டனர்.
இதை என்னுடைய அனுபவத்தில், மன்னிக்கவும் அனுபவத்தில் அல்ல நேரடியாகப் பார்த்ததை வைத்துச் சொல்கின்றேன்.
போதைப்பொருள்களை நானும் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன்.
நான் இருந்த இயக்கம் போதைப்பொருட்களை கடத்தவில்லை.
போதைப்பொருள் கடத்தியவர்களிடமிருந்து நான் பணம் மாத்திரமே வாங்கியினேன்.
சரி – பிழை என்பதற்கு அப்பால் இயக்கங்கள் எல்லாம் போதைப்பொருள் வியாபாரம் செய்தன என்பது உண்மை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் போதைப்பொருள் விற்றிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தண்டனையும் கொடுத்திருக்கின்றார்.
நாங்கள் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னர் இருந்த நிலைமைவேறு. இப்போது இருக்கின்ற நிலைமை வேறு.
அன்றைய காலத்தில் பாடசாலைகள், கோயில், விளையாட்டு என்று பல இருந்தன.
ஆயுதம் ஏந்திய காலத்தில் அதுவேறு நடைமுறையாக மாறியது.
ஆனால் ஆயுதப் போராட்டம் நிறைவடைந்த பின்னர் அது வேறுவிதமாகக் காணப்படுகின்றது.
அனைவரும் இன்று தொலைபேசியை நோண்டுகின்றனர். சிலர் பொழுதுபோக்குக்காக நோண்டுகின்றார்கள். சிலர் வேலைகளின் அடிப்படையில் நோண்டுகின்றார்கள். இது தவிர்க்க முடியாதது தான்.
ஆனால், இவற்றிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதையும் நாம் ஆராய வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன் போதைப்பொருள் வடக்கில் மாத்திரமல்ல தென்னிலங்கையிலும் உள்ளது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.