யாழ் பல்கலையின் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் தெரிவு!
யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக் கழகப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் பி. ரவிராஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்தப் பேரவைக் கூட்டத்தில் இடம்பெற்ற உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி தெரிவில் பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் முன்னிலை பெற்றுத் தெரிவாகியுள்ளார்.
இது வரை காலமும் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியாக விளங்கிய பேராசிரியர் கு. மிகுந்தனின் பதவிக் காலம் கடந்த பெப்ரவரி மாதம் நிறைவடைந்தது.
அதன் பின் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு, ஒருவர் மட்டும் விண்ணப்பித்திருந்த நிலையில் மீள் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
இதற்கமைய மூன்று பேர் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்திருந்த மூவரும் இன்று பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தமது எதிர்கால நோக்கு பற்றி விளக்கமளித்ததைத் தொடர்ந்து, தெரிவு இடம்பெற்றது.
தெரிவின் நிறைவில் 26 வாக்குகளுடன் பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் முன்னிலை பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.