நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்
பட்டியலினத்தவா்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன், அவரது நண்பா் ஷாம் அபிஷேக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பட்டியலினத்தவா்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன், அவரின் நண்பா் சாம் அபிஷேக் ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
கைதான இருவா் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுனும், அவரது நண்பருமான சாம் அபிஷேக்கும் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா். செல்வகுமாா் முன்பு புதன்கிழமை(செப்.22) விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னா், நடிகை மீரா மிதுன், அவரின் நண்பா் சாம் அபிஷேக் ஆகியோருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். தலா ரூ.10,000 மதிப்புள்ள இரு நபா் உத்தரவாதம், மறு உத்தரவு வரும் வரை இருவரும் தினமும் காலை 10.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்; விசாரணையின்போது சாட்சிகளை சேதப்படுத்தக் கூடாது; தலைமறைவாகக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.