ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம்

0 278

சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில் எடுப்பதிலும், சீனர்கள் போட்டி போடத் தொடங்கி இருக்கிறார்கள்.

மறுபக்கம், பெல்ஜியம் நாட்டில் புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். பெல்ஜியத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான புறா வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் நிகோலஸ் கெசெல்பெரெச்ட்.

நேற்று (15 நவம்பர் 2020, ஞாயிற்றுக்கிழமை), பெல்ஜியம் நாட்டில், நியூ கிம் என்கிற, இரண்டு வருட பெண் புறாவை, வெறும் 200 யூரோக்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17,600 ரூபாய்) ஏலத்தை தொடங்கினார்கள்.

இதில் நியூ கிம் என்கிற புறா, 2018-ம் ஆண்டில் பல்வேறு பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் தேசிய அளவிலான குறுகிய தூர பந்தய தூர போட்டிகளும் அடங்கும். இதன் பிறகு இந்த புறா ஓய்வு பெற்று விட்டது.

பந்தய புறாக்கள், அவற்றின் பத்தாவது வயது வரை குஞ்சுகளைப் பொறிக்க முடியும். இந்த நிலையில் நியூ கிம்மை, இரண்டு சீனர்கள் மாறி, மாறி அதிக தொகைக்கு ஏலம் கேட்டு இருக்கிறார்கள்.

கடைசியாக 1.6 மில்லியன் யூரோவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14.12 கோடி ரூபாய்), ஒரு சீனர் நியூ கிம்மை வாங்கி இருக்கிறார். இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது.

நியூ கிம் புறாவின் புதிய உரிமையாளர், நியூ கிம்மின் இனத்தை வளர்த்து எடுக்க பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

“இந்த உச்ச விலை நம்ப முடியாதது, காரணம் இது ஒரு பெண் புறா” என்கிறார் பிபா என்கிற ஏல நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் நிகோலஸ் கெசெல்பெரெச்ட். பொதுவாக, பெண் புறாக்களை விட, ஆண் புறாக்களே மதிப்பு அதிகம் வாய்ந்தவை. காரணம் ஆண் புறாக்கள் அதிக சந்ததிகளை உருவாக்கும் என்கிறார் நிகோலஸ்.

நியூ கிம் புறாவை வளர்த்த உரிமையாளர் குர்ட் வேன் டி வோவர், இந்த விலையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

இதற்கு முன், அர்மாண்டோ என்கிற 4 வயது ஆண் புறா 1.25 மில்லியன் யூரோவுக்கு விலை போனது தான் முந்தைய உச்ச விலையாக இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.