யாழ். வைத்தியசாலை கழிவுகளை வவுனியாவில் எரிக்கும் தீர்மானத்திற்கு செல்வம் எம்.பி எதிர்ப்பு..

0 252

யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு உடன்பட முடியாது என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை தெல்லிப்பழையில் எரிக்க முடியாது எனவும் எதிர்காலத்தில் வவுனியாவில் எரிப்பதற்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன்.

இவ்வாறான முடிவை எடுப்பதற்கு முன் வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும்.

வெறுமனே அலுவகத்திற்குள் இருந்துகொண்டு எடுக்கும் முடிவுகள் சமூகங்களுக்கிடையில் பிரிவினையையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தும் என்பதனை குறித்த அதிகாரிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வவுனியா வைத்தியசாலையின் கழிவுகள் தற்போது ஓமந்தை வைத்தியசாலை எரியூட்டும் நிலையத்தில் எரியூட்டப்படுகின்றது.

இதனால் அருகாமையில் உள்ள ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளையும் வவுனியாவில் எரிக்க முற்படுவதானது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

எனவே யாழ் போதனா வைத்தியசாலை கழிவுகளை யாழ்ப்பாணத்திலேயே எரிப்பதற்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.