போதைப்பொருள்.. தமிழகத்தில் காவல்துறை நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு குழு.. பரிந்துரைத்த ஹைகோர்ட்

0 202

தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளையும், போதையில்லா தமிழ்நாடு என்ற இணையதளம் சார்ந்த செயலி துவங்கப்படுவது குறித்தும் விலக்கப்பட்டிருந்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக, போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதாக தெரிவித்தனர். மேலும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் போதை பொருட்கள் சாதாரணமாக கிடைப்பதாகவும், இதனை கட்டுபடுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சட்ட பணிகள் ஆணையக் குழுவிற்கு உத்தரவிட்டனர்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் எந்த கடைகளும் அமைக்கக் கூடாது எனவும், போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரையும், சிபிஐ அதிகாரி ஒருவரையும், அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சிறப்பு கண்காணிப்பு குழுவில் இடம்பெற உள்ள அதிகாரிகளின் விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.