இலங்கையில் பிரபாகரனை பற்றி பேச தடை – தயாராகிறது புதிய சட்டம்..
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றியோ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேச முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்தள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நாடாளுமன்ற சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அதன் தலைவரையோ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜெர்மன் நாடாளுமன்றத்தை பொறுத்தவரை அங்கு நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது.
அதேபோலவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதுடன் பிரபாகரன் இலட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவர்.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு இடமளிக்க முடியாது.
இதனால் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம் எனவும் அவர் குறித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.