ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை சடலமாக மீட்பு..!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நிவாடி மாவட்டம் பாராபுஜுர்க் கிராமத்தில் 200 அடி ஆழம் கொண்ட மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் 3 வயது சிறுவன் பிரகலாத் ஒருவன் கடந்த 4ஆம் தேதி தவறி விழுந்து விட்டான். இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய மற்றும் மாநில் பேரிடர் மீட்புக் குழு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரும், காவல்துறை எஸ்.பியும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை கவனித்து வந்தனர்.
சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்ட போதும், கடைசியாக சிறுவனின் அழுகுரல் கடந்த 5ஆம் தேதி காலை கேட்கப்பட்டது. அதன்பின்னர், சிறுவனின் அழுகுரல் கேட்கவில்லை.
தமிழகத்தில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து ஒராண்டு ஆகிய நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மற்றொரு சிறுவன் தவறி விழுந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் 90 மணி நேர மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு சிறுவன் பிரகலாத் மீட்கப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து விட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்த அவர், ஆழ்துளைக் கிணறுகளை திறந்தநிலையில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.