ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் மனைவிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பிணை
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு பிணை வளங்கப்பட்டுள்து.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
ஹாதியா தொடர்பான வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சஹ்ரான் ஹாசிமுடைய தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் மனைவி ஹாதியா உள்ளிட்ட குழுவினர் மறைந்திருந்த போது, அவர்களை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றி வளைத்ததால், உயிரை மாய்துக் கொள்ளும் வகையில் அவர்கள் குண்டை வெடிக்கச் செய்தனர்.
2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடந்த அந்த தற்கொலை குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்த போதும், சஹ்ரானின் மனைவி ஹாதியாவும் அவரின் பெண் குழந்தை ருசைதாவும் உயிர் தப்பிருந்தனர்.
இதனையடுத்து அவர்களை காப்பாற்றிய ராணுவத்தினர், அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் உடல் நிலை தேறிய பின்னர் – பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், சஹ்ரானின் மனைவி ஹாதியா கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் கைப்பட்டார்.
இந்த நிலையிலேயே ஹாதியாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஹாதியா சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள் நேற்றைய தினம் ஆஜராகினர்.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை அரச சட்டவாதி லாபீர் நெறிப்படுத்தினார்.
ஹாதியா ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் நேற்று மன்றில் ஆட்சேபனைகளை முன்வைத்த அவரின் சட்டத்தரணிகள், நீண்ட நேர சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
மேலும் ஹாதியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் , அவை தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் போன்றவை தொடர்பிலும் அவரின் சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பினர்.
அதேவேளை இந்த வழக்கில் ஹாதியாவுக்கு பிணை வழங்குமாறு அவரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் 25 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில், கடுமையான நிபந்தனைகளுடன் அவரை விடுவித்தது.
இருந்தபோதும் ஹாதியா மற்றும் அவருக்கான பிணையாளர்கள் வெளிநாடு செல்லவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
அத்துடன் குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் ஆஜராகி ஹாதியா கையொப்பமிட வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து வழக்கு எதிர்வரும் மே மாதம் 17ஆம் திதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.